தனித்தமிழ் வளர்ப்போம்


Thursday 28 May 2015

திருக்குறளில் அறம்



திருக்குறளில் அறம்
திருக்குறள் தமிழில் தோன்றிய தலைசிறந்த அறநூல். தமிழின் பெருமையை உலகுக்கு உணர்த்திய நூல். 2000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. தமிழரின் பண்பாட்டைப் பறைசாற்றும் அறநூல்.
வேதாத்திரி மகரிஷி அவர்களும் 50 குறட்பாக்களைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு விளக்கங்களாக ஒரு நூல் வெளியிட்டுள்ளார்கள். ‘திருக்குறள் உட்பொருள் விளக்கம்’ என்ற தலைப்பில் வள்ளுவரின் உள்ளக் கருத்தை அப்படியே காட்டியுள்ளார்.
வள்ளுவர் அறத்துப்பாலில் இல்லறம் துறவறம் எனப் பகுத்து இல்லறத்துக்கு முதன்மை கொடுத்து இருவகையாருக்கும் தனித்தனியாகவும் பொதுவாகவும் அறங்கள் கூறியுள்ளர். அருட்தந்தை வேதாத்திரி மாத்துறவி அவர்களின் கருத்துக்களையும் மனதில் கொள்வோம். வள்ளுவர் அறத்துப்பாலில் பாயிரம் 4 அதிகாரங்கள் , இல்லறவியல் 20 அதிகாரங்கள், துறவறவியல் 13 அதிகாரங்கள், ஊழ் 1 அதிகாரம், என 38 அதிகாரங்கள் செய்துள்ளார். இதில் அறம் என்பதற்கு விளக்கமாக முத்திரை பதித்தாற்போலும் வைர வரிகள் சில உள்ளன.
வள்ளுவர் இறைவனை ‘அறவாழி அந்தணன்’ என்றும் அவர் பண்பை ‘அந்தணர் என்போர் அறவோர்’ என்றும் குறிப்பிடுகிறார்.
“சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறம்”
“அறத்தினூங்கு ஆக்கம் இல்லை”
“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்”
“அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
 இழுக்கா இயன்றது அறம்”
“அன்றறிவாம் என்னாது அறம் செய்க”
“அறத்தான் வருவதே இன்பம்”
“செயற்பால தோரும் அறனே”
“அறன் இல்வாழ்க்கைப் பயன்”
“அறன் இழுக்கா இல்வாழ்க்கை நோன்மையுடைத்து”
“அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை”
“அறத்திற்கும் மறத்திற்கும் அன்பு சார்பு”
“அன்பிலதனை அறம் காயும்”
“இன்சொல் இனிதே அறம்”
“நல்லவை நாடி இனிய சொலின் அறம் பெருகும்”
“கதம்காத்து கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம் பார்க்கும்”
“அறன் இயலான் பிறன் இயலாள் பெண்மை நயவாதவள்”
“அழுக்கறுப்பான் அறன் ஆக்கம் வேண்டாதான்”
“அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திரு”
“அறமுடையான் புறங்கூறான்”
“பிறன்கேடு சூழின் அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு”
என்ற குறள் வரிகள் அறத்தின் இலக்கணத்தையும் அதன் மேன்மையையும் உணர்த்துவன.
இல்வாழ்க்கை என்ற ஐந்தாம் அதிகாரம் முதல் புகழ் என்ற 24 ஆம் அதிகாரம் வரை இல்லற மாண்பு பேசப்படுகிறது. அது குறிப்பாகத் தமிழர்களின் வாழ்க்கை மேன்மையைக் காட்டுகிறது. இல்லறத் தலைவன் வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான். தலைவி தற்காத்துத் தற்கொண்டான்பேணி  தகைசான்ற சொற்காத்து இல்லறம் நடத்துகிறாள். மனைக்கு விளக்கம் மடவாள் அந்த மடவாளுக்கு விளக்கம் தகைசால் புதல்வர். புதல்வரைத் தம்மினும் அறிவுடையவராக வளர்க்கின்றனர். இல்லத்தில் அன்பு நிறைந்திருக்கிறது. விருந்தினரை உண்பித்துப் பின் தாம் உண்டு மகிழ்கின்றனர்.
இன்முகத்துடன் விருந்தினரை வரவேற்றல், பணிவான பேச்சு, நன்றியறிதல், தன்னடக்கம், பொறாமையின்மை, பயனில பேசாமை, தீயன செய்ய மனம் கூசுதல், உலக நடைமுறையறிந்து செயல்படல், தக்கார்க்கு ஈதல், அதன்வழித் தகுதியான புகழ் பெறல், இவை இல்லறத்தாரின் பண்புகளாக அமைகின்றன. இவை வள்ளுவர் கூறும் இல்லறம்.
மயிலாப்பூரில் வள்ளுவர் வாசுகியுடன் மேற்கண்ட பண்புகளமைந்த வாழ்க்கையைத்தான் வாழ்ந்தார். அதையே அனைவரும் மேற்கொண்டொழுகத் தம் பாடல்கள் மூலம் கூறி வைத்தார்.
“எல்லார்க்கும் நன்றாம் பணிதல்”
“ஈதலே நன்று”
“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்”
“நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று”
என்ற குறட்பாக்கள் சமுதாயத்தில் மக்கள் கூடி வாழத் தேவையான அறத்தைக் கூறுகின்றன. இந்தப் பண்பாடான நெறிமுறையை நீண்ட பாரம்பரியம் மிக்க ஒரு சமுதாயத்தில்தான் காண முடியும் என்று மேனாட்டாரும் பாராட்டுகின்றனர்.
இருள்சேர் இருவினை என்பதற்கு வேதாத்திரி அவர்கள் பிறக்கும் வரை கொண்டுவந்த முன் பிறவி வினை (சஞ்சித கர்மா) என்றும் பிறந்த பின் நாம் செய்து முடித்த வினை (பிராப்த கர்மா) என்றும் விளக்கம் கூறுகிறார். இறை நம்பிக்கை கொண்டு ஆசைப்படாமல் வாழ்பவரை இருவினைகள் சேரா.
தேவைக்குப் பயன்படுத்துவது உரிமை.
தேவைக்குமேல் பயன்படுத்துவது திருட்டு.
இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு. மேகம் மழையை வழங்குவது போல நாம் நம் சமுதாயக் கடமையை நிறைவேற்ற வேண்டும்.
இந்திரிய சுகத்தில் வீழ்ந்து கிடப்பவர்கள் இந்திரர்கள். இந்திரிய சுகத்தில் இருப்பவர்கள் தவம் செய்யமாட்டார்கள். ஒரு நொடிப்பொழுது ஒழுக்கம் தவறினும் கீழ்நிலைக்குப் போய்விடுவர்.
அறம் என்பது ஒழுக்கம், கடமை, ஈகை என்ற மூன்றும் இணைந்த வாழ்க்கை நெறி. ஒழுக்கம் என்பது தனக்கோ பிறருக்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ உடலுக்கோ மனதிற்கோ நன்மை தரக்கூடிய எண்ணம், சொல், செயல் என மாத்துறவி கூறுவார்.
இன்னொருவரை எதிர்பார்த்து வாழ்வது மனிதனுடய வாழ்க்கை முறை அன்று. தானும் உழைத்துண்டு வாழ வேண்டும். தன் உழைப்பினால் பெற்ற பொருளால் மற்றவருக்கும் உதவி செய்ய வேண்டும். இந்த இயற்கை நீதியை உணர்ந்துகொள்ள வேண்டும்.
காலம் காலமாகப் பெண்களுக்கே புத்தி சொல்லிப் பழகிவிட்டோம். ஆண்களை அவதாரங்களாக்கி விட்டோம்.
கணவனுடைய ஆற்றலையும் சிறப்பையும் வருமானத்தையும் உணர்ந்து வாழ்க்கை வசதிகளை அமைத்துக்கொள்ளும் பண்பைப் பெற்ற குடும்பம் ஒரு அறிவுத் திருக்கோவில்.
கற்புடைய பெண் மழை பெய் என்றால் பெய்யும் என்பது தவறு. பெய்யெனப் பெய்யும் மழைக்கு ஒப்பாவாள் என்று பொருள்.
மனைவி கணவனை வணங்குவது பெண்ணடிமைத்தனம் இல்லையா? எதிர்பார்ப்பு இல்லாமல் பெய்வது மழை. அதுபோல எதிர்பார்ப்பு எதுவுமின்றி இல்லறம் பேணுபவள் மனைவி என்பதாம்.
“பழகும் வகையில் பழகிப் பார்த்தால் பகைவன் கூட நண்பனே
அழித்திட வந்த பகைவன் என்றாலும் அன்புக்குப் பாதை விடு”
“புத்தமதக் கோட்பாடே அன்புதான்”.
எழு பிறப்பு என்பதைத் தொடர்ந்து வரும் ஏழு தலைமுறைக்கும் எனப் பொருள்கொள்ள வேண்டும்.
தனக்காகவும் குடும்பத்திற்காகவும் மட்டுமல்லாது பிறருக்காகவும் வாழ்வது விருந்தோம்பல்.
முரண்பட்ட வார்த்தைகள் தேவையில்லை என்பதினால் எல்லா மொழிகளிலும் தவறான வார்த்தைகள் மிகக்குறைவாகவே உள்ளன.
மரங்களில் தான் பழங்கள் கிடைக்கின்றன. உயிர் வாழ்வதற்கு ஆதாரமான மரங்களை வணங்க வேண்டும், வழிபட வேண்டும் என்ற உணர்வு வந்த போது அங்கு இறையுணர்வு தோன்றியது. இறையுணர்வுக்கு அடிப்படை நன்றியுணர்வு.
பயன் எதிர்பாராமல் உதவுவதற்குப் பெற்றோர் குழந்தையை வளர்ப்பதையும் பயனறிவார் என்பதற்குப் பிள்ளைகள் பெற்றோரை நினைத்துப் பார்க்க வேண்டும் என்பதையும் பொருளாகக் கூறுவார் மாத்துறவி.
தனக்கு நன்மை செய்தவர்க்கும் நன்றி பாராட்டி நடுவுநிலை தவறக் கூடாது என்பதற்காக அதிகார முறை வைப்பு அமைக்கப்பட்டது.
தகுதி என்பது வெளியில் இருந்து நமக்குள் வருவது.
தன்மை என்பது நமக்குள்ளே அடக்கம் பெற்ற ஆற்றல். தன்மை, தகுதி இரண்டும் இணைந்தால் அது திறமையாக மலரும். தன்னைப் போல் பிறரையும் நினைப்பதே நடுவுநிலைமை. அப்பண்புடையோரே சான்றோர்.
வள்ளுவர் உடைமை என்று 10 அதிகாரங்கள் தந்துள்ளார். அவற்றுள் அன்புடைமை, அடக்கம் உடைமை, ஒழுக்கம் உடைமை, பொறை உடைமை, அருள் உடைமை என்னும் ஐந்தும் அறத்துப்பாலில் வருவன.
அறிவுடைமை, ஊக்கமுடைமை, ஆள்வினை உடைமை, பண்புடைமை, நாணுடைமை என்பன ஐந்தும் பொருட்பாலில் வருவன.
சினம் அடங்கக் கற்றாலும் சித்தியெல்லாம் பெற்றாலும் மனம் அடங்குவது யார்க்கும் அரிது. விருப்பு வெறுப்பு அற்ற மனப்பக்குவம் பெற்றவர்க்கே மன அடக்கம் வாய்க்கும். அதிகார வரிசை முறையும் இதனால் விளங்கும்.
மனிதன் வாழ்நாள் முழுதும் பெற்ற தரத்தை ஒருவார்த்தையில் இறக்கிக் கெடுக்கக் கூடியது நாக்கு.
இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையே இன்பம். ஒழுக்கத்தைக் கற்பித்துக்கொண்டே ஒழுக்கத்தை மீறுகின்ற ஒரே உயிரி மனிதன் மட்டுமே.
உணர்ந்து ஒழுகுகிறவர்கள் மகான்கள்.
ஓதியதைக் கேட்டு உணர்ந்து கொள்பவர்கள் சீடர்கள்.
பொறாமை இருந்தால் ஒழுக்கம் இல்லை.
ஒழுக்கம் இருந்தால் பொறாமை இல்லை.
பிறன் இல் விழைவானை ‘பேதையர்’ என்றும் ‘விளீந்தார்’ என்றும் கூறுகிறார். பிறன் மனை நோக்காமை அறம் மற்றும் ஒழுக்கம்.
இறைத்தன்மைக்கு எல்லையில்லாதது போல பொறுமைக்கும் கருணைக்கும் அன்புக்கும் எல்லை கிடையாது.
பொறாமை மனிதனின் உடலுக்கும் மனிதனுக்கும் வாழ்க்கைக்கும் ஆன்மாவுக்கும் துன்பத்தைக் கொடுக்கக் கூடிய தீய அலை.
இரட்டைக் குழந்தைகளுக்கிடையே கூட வேறுபாடு உண்டு. வேறுபாட்டை உணர்ந்து ஏற்றுக் கொள்வதுதான் அறிவுடைமை.
ஒருவருடைய குறைகளைப் பேசுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அது புறம்பேசுவதாகும். பொய்யாக இருக்கும் பட்சத்தில் அது அவதூறு ஆகும்.
நம்முடைய  அனுபவங்களால் மற்றவர்களுக்குப் பாடம் கிடைக்க வேண்டும். மற்றவருடைய அனுபவங்களால் நமக்குப் பாடம் கிடைக்க வேண்டும். வாழ்க்கையில் அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டும்.
ஒரு அறிவாளியின் வாய் அவன் மனதில் இருக்கிறது. ஒரு முட்டாளின்  மனம் அவன் வாயில் இருக்கிறது.
நன்மையைப் பிறர்க்களித்து நட்டத்தைத் தான் ஏற்போர் ஈசன் நிலை உணர்ந்தோர் என்பார் மாத்துறவி. சிவ பெருமான் அமுதத்தைத் தேவர்களுக்கு அளித்து நஞ்சைத் தானுண்டதை இங்கு நினைவுகூர்வோம்.
புகழ் என்பது நன்மையைப் பாராட்டுகிற நன்றியுணர்வு. மக்களுக்கு நன்மை செய்தவர்கள் தான் உடலால் அழிந்தாலும் வரலாற்றில் நிலைத்து நிற்கிறார்கள். அதைத் தலைமுறைக்கும் எடுத்துரைப்பவர்கள் ஆசிரியர்கள், சிந்தனையாளர்கள்.
“அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இல்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு”
மனித வாழ்க்கையில் இரண்டு பக்கம் இருக்கிறது. உரூபாய் நோட்டில் இரண்டு பக்கமும் அச்சாகி இருந்தால் தான் அது செல்லுபடியாகும். வாழ்க்கையில் ஒருபக்கம் பொருள், மறுபக்கம் அருள். பொருளும் அருளும் இணைந்ததே வாழ்க்கை. பொருள் மட்டும் இருந்தால் அது செல்லாக் காசு.
புலால் உண்ணாமை உள்ளது உயிர்நிலை. இறைவனுக்கு ஆடு, கோழி வெட்டினால் நல்லது நடக்கும் என்று எண்ணுகிறார்கள். இது அறியாமை என்கிறார் வள்ளுவர்.
மனதைப் பக்குவப் படுத்துகிற பயிற்சி தவம். சாதாரண மனநிலைக்கும் தவத்தின் மூலமாக அடைகிற மனநிலைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. இறை நெறியை உணர்கின்றபோது எதையும் ஏற்றுக்கொள்ளக் கூடிய மனப்பக்குவத்தைப் பெறுகிறோம்.
யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தர மாட்டேன்; துன்பப்படும் உயிர்கட்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன் என வாழ்வது தவம்.
துறவு வாழ்க்கை மேற்கொள்கிறேன் என்று சொல்லி குடும்பம், புலன் இன்பம் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு வாழ்பவர்கள் மனதில் ஏற்படக்கூடிய போராட்டங்களைக் கூடா ஒழுக்கம் என்ற அதிகாரம் சுட்டுகிறது.
உள்ளத் தூய்மையே முதன்மையானது. புறத்தோற்றம் அன்று. யாழ் வளைந்திருப்பினும் இன்னிசை தருவது. அம்பு நேராக இருப்பினும் காயப்படுத்துவது. உலகம் பழித்ததை ஒழித்துவிடு. அதுவே மேலான தவம்; மேலான அறம் என்கிறார்; வள்ளுவர்.
தெய்வ நெறியை மதித்து வாழ்கிற வாழ்க்கைக்கு அறம் என்று பெயர். ஆன்மிகத்திற்கு இல்லறம் எதிரானது அன்று.
பல துறவிகள் மனைவிகளோடு வாழ்ந்ததைப் புராணங்களில் படித்திருக்கிறோம். இந்த மேலான வாழ்க்கை இலக்கணத்தைக் கொடுத்த வள்ளுவரும் தம் மனைவி வாசுகியோடு வாழ்ந்துகாட்டியிருக்கிறார்.
பொய், களவு, சூது, கொலை, கற்பு நெறி தவறுதல் இவ்வைந்தும் மிகப்பெரிய பாவங்கள். பொய் மனதில் தோன்றும் குற்றம். உண்மை என்பது உள்ளத்தில் பிறப்பது. அது வாய் வழியாக வரும் போது வாய்மையாகிறது. உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது. நல்ல உள்ளம் என்பது மனச்சான்று.
வள்ளுவர் தன்னுடைய வாழ்க்கையையே சான்றாக வைக்கிறார். ‘வாய்மையைவிட நல்ல பிற ஒன்றை யான் கண்டதில்லை’ என்கிறார்.
வெகுளி என்பது எரிபொருள் போன்றது. அது மனமகிழ்சியைக் கொல்லும்; நகையும் உவகையும் கொல்லும்; சினம் நமக்குக் காலனாக மாறும். இனத்தையும் அழிக்கும்.
தான் செய்யும் நல்வினை தீவினைப் பயன்கள் தனக்கோ தன் சந்ததிக்கோ திரும்ப வந்தே தீரும்.
‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’
‘முற்பகல் செயின் பிற்பகல் விளையும்’
புலால் மறுத்தல், கொல்லாமை இரண்டும் ஒரே கருத்தைச் சொல்லவில்லை. புலால் மறுத்தல் சமைத்துக் கொடுத்ததை உண்ண மறுப்பது. கொல்லாமை என்பது உயிர்க் கொலை செய்யாமல் இருப்பது. மாத்துறவி இவையிரண்டையும் ‘உணவுக்கு உயிர் கொல்லாமை’ என்கிறார். ‘அறவினை யாதெனில் கொல்லாமை’ என்கிறார் வள்ளுவர்.
செல்வம், உடல், இளமை இவை நிலையா. எனவே இதை உணர்ந்து இளமையிலேயே அறம் செய்ய வேண்டும். உயிரைப் பாதுகாக்க ஏற்ற பெட்டகம் அறம்.
உண்ணா நோன்பு உடலைத் தூய்மை செய்யும்.
மௌன நோன்பு மனதைத் தூய்மை செய்யும்.
அளவு முறையோடு வாழ்க்கை வளங்களைப் பயன்படுதினால் எந்தவிதத் துன்பங்களும் வருவதில்லை என்ற இயற்கை நெறியை மையமாக வைத்து அந்தப் பக்குவத்தைத் தரக்கூடிய பயிற்சி முறைகளைத் துறவு என்று வகுத்தார்கள்.
வள்ளல் பெருமான் இராமலிங்க அடிகள்,
   “வேண்டியன அறிவோய் நீ
    வேண்டிய தெல்லாம் தருவோய் நீ” என்கிறார்.
நம் உடம்பில் தெய்வத்தைக் காண முடியாதவன் வேறெங்கும் காண முடியாது.
புத்தர், ‘ஆசையே துன்பத்திற்குக் காரணம்’ என்றார். அவருக்குப் பின் வந்த வள்ளுவர் ‘அவா அறுத்தல்’ என்கிறார்.
அறத்துப்பால் கடவுள் வாழ்த்தில் தொடங்கி ஊழ் அதிகாரத்தில் முடிகிறது. வள்ளுவப் பெருந்தகை அறத்தைப் பற்றிய முழு விளக்கத்தைக் கொடுத்து அறவழியில் நின்று பொருளீட்ட வேண்டும் என்பதை அடுத்து வரும் பொருட்பாலில் விளக்குகிறார்.
திருக்குறளுக்குப் பின் வந்த அறநூல்கள் வள்ளுவத்தை விளக்குவனவாக அமைந்தனவே அன்றி விஞ்சுவனவாக எதுவும் அமையவில்லை. உலகிலேயே எந்த மொழியிலும் திருக்குறளை விஞ்சிய ஓர் அறநூல் இல்லை.
திருக்குறள் அறத்தினை உணரத் தலைப்படுவார்க்கு ஓர் அறநூல். வாழ்க்கை நெறியறிய விரும்புவோர்க்கு ஒரு வாழ்க்கை வழிகாட்டு நூல். அந்நூலைப் பயில்வார் பெருஞ்சிறப்புப் பெறுவார். எனவே வள்ளுவம் கற்போம்; வாழ்க்கை அறிவோம் !

ஆக்கம்    :      செ.கணேசன் எம்.ஏ., எம்.எட்.,
ஆலோசகர்,
(முன்னாள் தமிழ்மொழிக் கல்வி விரிவுரையாளர்)
கதிர் கல்வியியல் கல்லூரி,
எஸ்.எப். எண் : 806,
அவினாசி சாலை,
நீலம்பூர், கோயம்புத்தூர் – 641062
கைப்பேசி : 9842225244