தனித்தமிழ் வளர்ப்போம்


Thursday 22 September 2016

பி.எட்., படிப்பில் சரியும் மாணவர் சேர்க்கை!

கோவை மாவட்டத்தில், பி.எட்., பட்டம் பெற்று, 8,764 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில், அரசு பணிக்காக காத்திருப்பு பட்டியலில் உள்ளது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தால் தெரியவந்துள்ளது.

தொடரும் வேலைவாய்ப்பு தட்டுப்பாடு,டெட் தேர்வுகல்வி காலம் உயர்வு காரணங்களால் மாணவர்கள் சேர்க்கை நடப்பு கல்வியாண்டிலும் சரிந்துள்ளது.
தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ்,தமிழகம் முழுவதும், 726 பி.எட்.கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லுாரிகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும்ஒரு லட்சம் பேர் பி.எட்.,பட்டம் பெற்று வெளிவருகின்றனர். 2003ம் ஆண்டுகளுக்கு முன்தமிழகத்தில் பி.எட்.,கல்லுாரிகளின் எண்ணிக்கை குறைவு இதனால்பட்டம் பெற்றவர்களுக்குவேலைவாய்ப்பு எளிமையாக இருந்தது.
ஆனால், 2003ம் ஆண்டுக்குப் பின்தமிழகத்தில் தனியார் பி.எட்.கல்லூரிகள் தொடங்க தேசிய ஆசிரியர் கல்விக்கவுன்சில் அனுமதி அளித்தது. தொடர்ந்துபுற்றீசல் போல் பல்வேறு தனியார் பி.எட்.கல்லுாரிகள் துவங்கப்பட்டன. இதனால்வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காத்திருப்பு பட்டியலும் நீண்டு வருகிறது.
இந்நிலையில்அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை சரிவால் உபரி ஆசிரியர்கள் அதிகரிப்பு,கட்டாய டெட் தகுதித் தேர்வுவேலைவாய்ப்பின்மைஇரண்டாண்டு கல்விக்காலம் உயர்வு போன்ற காரணங்களால்பி.எட்.கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க்கை படிப்படியாக சரிந்தது.
நடப்பு கல்வியாண்டில், 60 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தனியார் பி.எட்.கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க்கை இன்றி மூடுவிழாவை எதிர்நோக்கியுள்ளது.
கல்வியாளர் பிரபாகரன் கூறுகையில்நடப்பு கல்வியாண்டில்அரசு பி.எட்.கல்லுாரிகளில் மட்டுமே இடங்கள் பூர்த்தியாகியுள்ளது. அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லுாரிகளின் நிலை பரிதாபத்தில் உள்ளது. மாணவர்கள் சேர்க்கை இன்மையால் தனியார் கல்லுாரிகள் மூடுவிழாவை எதிர்நோக்கியுள்ளனர்.
கடந்தஜூலை நிலவரப்படி கோவை மாவட்டத்தில் மட்டும், 8,764 பேர் பி.எட்.முடித்து காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். தமிழகத்தில், 6 லட்சத்து 50 ஆயிரத்து 991 பேர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர் என்பது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அறிந்துகொண்டேன். ஒவ்வொரு ஆண்டும் காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களின் எண்ணிக்கை உயர்ந்துவருகிறதுஎன்றார்.

Tuesday 20 September 2016

உனக்கு எதுக்கு நான் வணக்கம் சொல்லணும்?

ராஜா இரவில் மாறுவேடத்தில் நகர்வலம் வந்தார். இரண்டு மெய்க்காப்பாளர்களும் கூடவே சென்றனர்.


திடீரென்று கடுமையான  மழையும், காற்றும் அடித்தன. வானம் இருண்டு போனது . ராஜா காவலாளிகளை விட்டு வழி தவறிப் போய்விட்டார்.

எங்கும் காரிருள்,சற்று தொலைவில் ஒரு  சிறு குடிசை தெரிந்தது . அதிலிருந்து லேசான வெளிச்சமும் வந்து கொண்டிருந்தது. ராஜா வேகமாக அதனை நோக்கி நடந்தார்.

 அதற்குள்ளே கந்தல் ஆடை அணிந்த ஒரு மனிதனைத் தவிர வேறு யாருமில்லை. ராஜா உள்ளே நுழைந்தும் அவன் எந்த சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தான்.
         
மாறு வேடத்தில் இருந்த போதிலும், அவன் மரியாதை தராமல் அமர்ந்திருந்ததில் ராஜாவுக்குக் கொஞ்சம் கோபம் வந்தது .
"ஏம்ப்பா! உன் வீட்டுக்கு வந்திருக்கேன் , நீ மரியாதையே இல்லாம, ஒரு வணக்கம் கூட சொல்லாம உக்காந்திருக்கியே?" என்றார்.

பதிலுக்கு அவன், "நீதான் என் வீட்டுக்குள்ள அடைக்கலமா நுழைஞ்சிருக்க. உனக்கு எதுக்கு நான் வணக்கம் சொல்லணும்?" என்றான்.
     
ராஜாவால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் எப்போதும் நகர்வலம் போகையில் ஒரு பொற்காசு மூட்டையைஉடன் வைத்திருப்பார்.

அதை அவனிடம் பிரித்துக் காட்டி விட்டு  "பார்த்தாயா? நான் எவ்வளவு பெரியவன் என்பதை?
இப்ப எனக்கு  வணக்கம் சொல்வாயா ?" என்றார்.

அவனும் பதிலுக்கு, "ஒரு ஏழை பக்கத்தில இருந்தும் ஒரு மூட்டை பொற்காசை நீயே வச்சிருக்கியே, உனக்கு எப்படி வணக்கம்
சொல்வது?" என்றான்.
     
ராஜா கோபமாய் ஒரு காசை அதிலிருந்து எடுத்து அவனிடம் வீசி, "இப்ப வணக்கம்  சொல்வாயா?" என்றார் .
       
காசைத் தொடாமல் அவன்  சொன்னான்,
"ஒரு மூட்டை காசை வச்சுக்கிட்டு அற்பமா ஒத்தக் காசை வீசுறியே, உனக்கா வணக்கம் சொல்வேன்?"
       
அரசர் இன்னும் உக்கிரமானார். பாதி மூட்டையை அவனருகே பிரித்துக் கொட்டி விட்டுக் கேட்டார், "எங்கிட்ட இருந்ததுல  சரி பாதியைக்  கொடுத்துட்டேன்.  இப்பவாவது வணக்கம் சொல்வியா?"

மெல்லிய புன்னகையுடன்  அவன் சொன்னான், "உங்கிட்ட இருக்குற அளவுக்கு இப்ப எங்கிட்டேயும்  இருக்கே! இப்ப நீயும் நானும் சமமாயிட்டோமே. சரி சமமா இருக்கிற உன்னை எதுக்கு நான் மதிக்கணும்? "

ராஜாவுக்கு ஆத்திரம் கண்ணை மறைத்தது. மிச்சமிருந்த மூட்டையும் அவனிடத்தில் வீசி விட்டார், "இருந்த எல்லாத்தையுமே கொடுத்துட்டேன். இப்பவாவது வணக்கம் சொல்" என்றார் .
     
அவன் சிரித்துக் கொண்டே சொன்னான்  ,
"இப்ப உங்கிட்ட ஒன்னுமே இல்லை. ஆனா எங்கிட்ட ஒரு மூட்டை தங்கம் இருக்கு.  இப்ப நீதான் எனக்கு வணக்கம் சொல்லணும்?" என்றான்.

ராஜா வாயடைத்துப் போனார் .

எத்தனைதான் அள்ளிக் கொடுத்தாலும் மனித இதயம் திருப்திப் படுவதில்லை . நிரந்தரமான மரியாதை என்பது பணத்தைக் கொண்டு வாங்கும் பொருளுமில்லை.  உண்மையான  அன்பைப் பிறருக்குக் கொடு. அதுவே பலமடங்காக உனக்குத் திரும்பக் கிடைக்கும்.

Tuesday 17 May 2016

எதற்காகவும் உங்களின் விருப்பத்தை விட்டுக்கொடுக்க வேண்டாம்

          பள்ளிப் படிப்பை நிறைவுசெய்து, உயர்கல்விக்கு செல்லும் காலகட்டத்தில், பல மாணவர்கள், அதற்கான ஏற்பாடுகளில், மும்முரமாக இருக்கும் காலகட்டம் இது.
       இந்தியாவில், குறிப்பாக, தமிழகம் போன்ற மாநிலங்களில் பிரபலமாக இருக்கும் பொறியியல் படிப்பா? பலராலும் பெரிதாக நினைத்து விரும்பப்படும் மருத்துவமா? கலை, அறிவியல் படிப்பா? தொழில்நுட்ப படிப்பா? மேலாண்மை படிப்பா? அல்லது டிப்ளமோவா என்பன போன்ற பலவித குழப்பங்களில் மாணவர்கள் சிக்கித் தவிப்பர்.
         இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் பெரிய கொடுமை என்னவென்றால், பெரும்பான்மையான மாணவர்களுக்கு, அவர்கள் நல்ல பொருளாதார வசதி பெற்றிருந்தாலும் கூட, தாங்கள் விரும்பிய படிப்பை படித்து, விரும்பிய துறையில் பணிபுரியும் ஒரு நல்வாய்ப்பு வாய்ப்பதில்லை.
சமூக அந்தஸ்து, நல்ல வேலை வாய்ப்பு, சிறப்பான சம்பளம், பெற்றோரின் விருப்பம், மூன்றாம் நபரின் தலையீடு, போதுமான விழிப்புணர்வு இல்லாமை, நாட்டின் சூழல் உள்ளிட்ட பல்வேறான காரணங்களால், பலரும், தங்களுக்கு விருப்பமில்லாத படிப்பிலேயே சேர்ந்து படிக்கின்றனர். பாதிபேர், படிப்பு தொடர்பான பணி வாய்ப்புகளைப் பெறும் நிலையில், இன்னும் பாதிபேர், படிப்புக்கு தொடர்பேயில்லாத பணி வாய்ப்புகளைப் பெறுகின்றனர்.
அதாவது, விருப்பமில்லாத ஒரு படிப்பில் சேர்ந்து, அதை படித்து முடித்து, கடைசியில், அந்த படிப்பு தொடர்பான பணி வாய்ப்புகளைக்கூட பெற முடியாமல், வேறு ஏதோவொரு பணி வாய்ப்பை பெற்று, தமது வாழ்க்கையை நகர்த்துகின்றனர். இதை கொடுமையிலும் கொடுமை என்று கூறலாம்.
40 மற்றும் 50 வயதைக் கடந்த பலர், தாங்கள் செய்யும் பணிகளில் திருப்தியில்லாமல்,
          "ஏதோ, வேறு வழியில்லை, இப்படியே என் காலத்தை ஓட்டிவிட்டேன்; என்ன செய்வது, வருமானத்திற்காக ஏதோ ஒரு வேலையைப் பார்த்துதானே ஆக வேண்டியுள்ளது. என் பள்ளி மற்றும் கல்லுரி நாட்களில், நான் சிறந்த விளையாட்டு வீரன்/வீராங்கனை. ஆனால், என் தந்தைக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை. என்னை வற்புறுத்தி, ------- பட்டப் படிப்பை படிக்க வைத்தார். கடைசியில், அந்தப் படிப்பிற்குகூட சம்பந்தமில்லாத வேலையைத்தான் நான் இத்தனை ஆண்டுகளாக பார்த்து, குப்பைக்கொட்டி வருகிறேன்; இப்படியே என் வாழ்க்கை முடிந்துவிட்டது. நான் விரும்பிய படிப்பையும் படிக்க முடியவில்லை. விரும்பிய பணியையும் மேற்கொள்ள முடியவில்லை"
என்பன போன்று, பல ரகமாக புலம்புவதை பலர் கேட்டிருக்கலாம்.
இதில், நமக்கான எச்சரிக்கை என்னவென்றால், இதுபோன்றதொரு வகையான புலம்பல், நாளை நம்முடையதாகி விடக்கூடாது. எனவே, மாணவர்களே, உங்களுக்கான உயர்கல்வியை மிகவும் கவனமாக தேர்வு செய்யுங்கள்.
           பெற்றோர்கள், நாம் மோசம் போக வேண்டுமென நினைப்பதில்லை. ஏதோ அறியாமை அல்லது சமூக அழுத்தம் அல்லது அவர்களுடைய ஆசை ஆகியவற்றுக்காக நம்மை, உயர்கல்வி விஷயத்தில், நமது விருப்பத்துக்கு மாறாக வற்புறுத்துகிறார்கள், அவ்வளவே. அவர்களை, நம்மளவிலோ அல்லது வேறு யாரேனும் சரியான நபர்களின் துணைகொண்டோ புரிய வைப்பது நம் கடமை.
           இந்த சமூகத்தைப் பற்றி நாம் அதிகம் கவலைப்பட வேண்டாம். பணம், புகழ், செல்வாக்கு ஆகியவை எங்குள்ளதோ, அதை நோக்கி இந்த சமூகம் எப்போதும் தாவிக்கொண்டே இருக்கும். எனவே, இந்த சமூகத்தில் நிலவும் சூழலின் பொருட்டு, உங்களுக்கான படிப்பை தயவுசெய்து தேர்வுசெய்ய வேண்டாம்.உங்களின் திறமை, விருப்பம் மற்றும் எதிர்கால லட்சியம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே படிப்பை தேர்வு செய்யவும். உங்களின் துறையில் நீங்கள் புகழ்பெற்றுவிட்டால், இந்த சமூகம் உங்களைத் தூக்கி கொண்டாடும்.
      இன்று புதிதுபுதிதாக பல துறைகள் முளைத்து வருகின்றன. கவனிப்பாரற்று கிடந்த சில துறைகள், இன்று, வேறு வகையில் புத்துணர்வு பெற்று வருகின்றன. தகவல் தொழில்நுட்ப உலகில், நம்மை வெளிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் மிக அதிகம். 20 ஆண்டுகளுக்கு அல்லது 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை இப்போது இல்லை.
         எனவே, உங்களுக்கான படிப்பை தேர்வு செய்யும்போது, இதைவைத்து நாம் பிழைக்க முடியுமா, கரை சேர முடியுமா? என்று வெறுமனே யோசிக்காமல், இத்துறையில் நுழைந்தால், நாம் எப்படியெல்லாம் நம் திறனை வளர்த்துக்கொண்டு, நம்மை சிறப்பான முறையில் வெளிப்படுத்திக்கொண்டு, புகழையும், பணத்தையும் சம்பாதிக்கலாம், இந்த சமூகத்திற்கு எதையாவது நல்லது செய்யலாம் என்பதைப் பற்றி மட்டுமே யோசியுங்கள்.
      உங்கள் லட்சியத்தை, சரியான முறையில் திட்டமிட்டு, அதற்கேற்ப, விடாமுயற்சியுடன் உழைத்து, அதை அடைந்துவிட்டால், அப்புறம் பாருங்கள், இந்த சமூகம், உங்களை நோக்கி திரும்பி பார்க்கும்.

கல்லூரியில் படிப்பதென்பது...

              பள்ளிப் படிப்பு வரை எப்படியோ முடித்தாகிவிட்டது என்று, பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பலரும் நிம்மதி பெருமூச்சு விடுவர். பள்ளிப் படிப்பு என்பது, குறிப்பாக பிளஸ் 2 படிப்பானது, ஒருவரின் உயர்கல்வி வாய்ப்பை நிர்ணயிக்கும் அம்சம் மட்டுமே.
        ஆனாலும், தனித்திறமையும், சாதனை வேட்கையும் கொண்ட மாணவர்கள், பிளஸ் 2 படிப்பில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றாலும்கூட, வாழ்க்கையில் முன்னேறி, புகழ்பெற்று விடுகிறார்கள்.
இங்கே, கல்லூரிப் படிப்பு என்று எடுத்துக்கொண்டால், அது கலை - அறிவியல் படிப்போ, மருத்துவப் படிப்போ, பொறியியல் படிப்போ, மேலாண்மை படிப்போ மற்றும் இன்னபிற படிப்புகளோ, அவை எதுவானாலும், அப்படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள், தங்களின் பள்ளிப் படிப்பு மனோநிலையை கட்டாயம் தாண்டி வரவேண்டியுள்ளது. இல்லையெனில், அவர்கள் பல விஷயங்களிலும் பின்தங்கும் அவலநிலை ஏற்படுகிறது.
          பள்ளிப் படிப்பை பொறுத்தவரை, இந்தியா போன்ற நாடுகளில், அதன் பண்பாடே, வேறுமாதிரியாக உள்ளது. பாடப்புத்தகம் மட்டுமே அங்கு பிரதானம். விளையாட்டு மற்றும் இதர திறமைகளை வளர்ப்பது குறித்த செயல்பாடுகள், பெயரளவிற்கே நடக்கும். அதுவும், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு வந்துவிட்டால் போதும், சொல்லவேத் தேவையில்லை. நிலைமையே தலைகீழ்.
           பாடப்புத்தகத்தை தவிர, வேறு எதற்கும் இடமில்லை. பாடப்புத்தகங்களை மனப்பாடம் செய்து தேர்வெழுதி, உயர்கல்வியில், மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற படிப்புகளில் சேர்வதுதான் வாழ்க்கையின் ஒரு பெரிய கவுரவமாகவும், அந்தஸ்தாகவும் கருதப்படும் நிலை உள்ளது.
           சரி, அவை அப்படியே இருக்கட்டும். தற்போது, நாம் ஏதோ ஒரு உயர்கல்வி படிப்பில் சேர்ந்துவிட்டோம். அது எதுவாகவோ இருக்கட்டும். அந்தப் படிப்பை எப்படி படித்தால், அதாவது, நமது கல்லூரி அல்லது பல்கலைக்கழக வாழ்வை எவ்வாறு செலவிட்டால், நம் எதிர்கால வாழ்வு சிறப்பாக அமையும் என்பதைத்தான் சிந்திக்க வேண்டியுள்ளது.
            சமீப ஆண்டுகளில், நாம் ஒரு செய்தியை(பொதுவாக தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை படிப்புகளை படித்தவர்களுக்கானது) அடிக்கடி கேட்டிருப்போம்."பல பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் தேசிய, உலகளாவிய கார்ப்பரேட் நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான அளவில், தகுதியான பணியாளர்கள் கிடைக்காமல் திண்டாடுகின்றன" என்பன போன்ற செய்திகள்தான் அவை.
             ஒவ்வொரு ஆண்டும், படித்து முடித்து வெளியேறும் பட்டதாரிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்க, தகுதியான பணியாளர் பற்றாக்குறையோ, கூடிக்கொண்டே செல்கிறது. நாம், தகுதியான கல்லூரியில் படிக்கிறோமா என்பது இருக்கட்டும். ஆனால், ஒரு சுமாரான கல்லூரியில் படித்தாலும்கூட, ஒரு மாணவர், தனது படிக்கும் காலத்தை எவ்வாறு செலவிட வேண்டும் என்பதை தெரிந்துகொள்வதில்தான் வெற்றியின் ரகசியம் அடங்கியுள்ளது.
                  பள்ளிப் படிப்பு வரையில், நாம் படித்த விதமே வேறாக இருக்கலாம். பள்ளிப் படிப்பில், ஒருவர், வெற்றிகரமான மாணவராக இருக்க வேண்டுமெனில், பொதுவாக, பாடப்புத்தகத்தை நன்றாகப் படித்தாலே போதுமானது. அவர், வெற்றிகரமாக பள்ளியைவிட்டு வெளியே வந்து, தனக்குப் பிடித்தமான உயர்கல்வி நிறுவனத்தில், தனக்குப் பிடித்தமான படிப்பில் சேர்ந்து விடலாம்.
             ஆனால், கல்லூரி படிப்பு என்பது இறுதி கட்டம். அப்படிப்பை முடித்தவுடன், நாம் பணிக்கு செல்ல வேண்டும். எனவே, நாம் எந்தளவிற்கு தயாராக இருக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்வது முக்கியம். வெளியுலகில் வேலை பார்ப்பதற்கு தேவையான பல்வேறு திறன்களையும், நாம், கல்லூரி படிப்பின்போதே கற்றுக்கொள்ள வேண்டும்.அப்போதுதான், படித்து முடித்தவுடனேயே, நல்ல நிறுவனத்தில், நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். தொழில்துறைதான் என்றில்லை, எந்த துறையாக இருந்தாலும் சரி, நாம் படிக்கும்போதே தேவையான தகுதிகளை வளர்த்துக்கொண்டால், பணி செய்யும்போது ஜொலிக்கலாம்.
            எனவே, கல்லூரிக்குள் நுழையும்போது, பள்ளிப் படிப்பின் பண்பாட்டைப் பற்றி மறந்துவிட்டு, உங்கள் சிந்தனையைப் பரவலாக்கி, வெளி உலகைப் பற்றிய உங்களின் பார்வையை விரிவாக்கி, வாழ்விற்கு தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
     ஏனெனில், கல்லூரிப் படிப்பை நிறைவுசெய்யும் ஒரு மாணவர், பணிசெய்தல் என்ற மிகப்பெரிய ஒரு பொறுப்பிற்குள் செல்கிறார். அங்கே அவர் வெற்றி பெறுவதும், தோல்வியடைவதும், அவர், கல்லூரி காலத்தில் கற்றுக்கொள்ளும் திறன்களில்தான் அடங்கியுள்ளது.

கல்லூரி வாழ்க்கை என்னும் சொர்க்கத்தில்...

        பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரி வாழ்வில் அடியெடுத்து வைக்கும் மாணவர்களே, கல்லூரிப் படிப்பு எப்படியானது என்பதை நீங்கள், சீனியர்களின் மூலமாக ஓரளவு அறிந்திருப்பீர்கள்.
பள்ளி வாழ்க்கையோடு ஒப்பிடுகையில், கல்லூரி வாழ்க்கை அதிகளவில் வித்தியாசப்படக்கூடிய ஒன்று. அதிக சுதந்திரமாக உணர்வோம் மற்றும் வாழ்க்கையில் நாமும் பெரிய ஆளாக ஆகிவிட்டோம் என்று உணர்வதோடு, ஒரு புதிய மனோபலத்தையும் பெறுகின்ற பருவமே இந்தக் கல்லூரி பருவம்.
கல்லூரிப் படிப்பை பொறுத்தவரை, பள்ளிப் படிப்பில் இல்லாத சில சவுகரியங்கள் உண்டு.
முழு ஆண்டுத்தேர்வு என்ற நெருக்கடி இல்லாமை, செமஸ்டர் சிஸ்டம், ஆசிரியர்களின் கடுமையான கண்டிப்பின்மை, விடுமுறை எடுப்பதில் சற்று சுதந்திரம், சீருடை இல்லாமை, ஒரு ஆண்டுக்கான பாடங்களில் முழுமையாக தேர்ச்சி அடையாவிட்டாலும், அடுத்த ஆண்டு படிப்பிற்கு செல்லும் நடைமுறை, ஒரு செமஸ்டரில் சற்று மதிப்பெண் குறைந்தாலும், அடுத்த செமஸ்டரில் அதிக மதிப்பெண்கள் பெற்று அதை ஈடுசெய்துகொள்ளும் வசதி மற்றும் பள்ளிப் படிப்பைவிட அதிகமான விஷயங்களை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கல்லூரிப் படிப்பின் முக்கியமான சவுகரியங்கள்.
மேற்குறிப்பிட்ட பல சலுகைகளை, ஒரு குறிப்பிட்ட சதவிகித மாணவர்கள், தவறாக பயன்படுத்தும் பழக்கமுடையவர்களாக அல்லது கல்லூரிக்குள் நுழைந்ததும் அப்பழக்கத்திற்கு ஆட்படுபவர்களாக இருக்கிறார்கள்.
அவை என்னென்ன?
அரியர் வைத்தல்
ஒரு செமஸ்டரில் சில பாடங்களில் தவறினாலும்(fail), அடுத்த செமஸ்டரில் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனப்பான்மை. இதில் ஒரு பிரச்சினை என்னவென்றால், அடுத்த செமஸ்டரை எழுதும்போது, நாம் கூடுதல் சுமையுடன் எழுத நேரிடுகிறது.
இதனால், கடந்த செமஸ்டர் பாடங்களையும் படிக்க வேண்டுமே என்ற மனஅழுத்தத்தில், இந்த செமஸ்டர் பாடங்களில், போதியளவு கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. அதேசமயம், தொடர்ந்து அசட்டையாக இருக்கும் மாணவர்கள், ஒவ்வொரு செமஸ்டரிலும் ஏதேனும் சில பாடங்களில் தோல்வியடைகிறார்கள்
எனவே, அவர்களின் அரியர்கள் எண்ணிக்கை ஏறிக்கொண்டே போய், முடிவில், அவர்கள் கல்லூரி இறுதியாண்டு வரும்போது, குறைந்தபட்சம் 10 முதல் 15 அரியர்கள் வரை வைத்திருப்பார்கள். விளைவு, அவர்கள் தங்களின் பட்டப்படிப்பை நிறைவு செய்யாமலேயே கல்லூரியை விட்டு வெளியேறும் அவலநிலை ஏற்படுகிறது.
இத்தகைய மாணவர்கள், அதன்பிறகான ஆண்டுகளிலும், சோம்பேறித்தனம் மற்றும் இன்னபிற வாழ்க்கைச் சூழல்களால், தங்களின் பட்டப் படிப்பை கடைசிவரை நிறைவுசெய்ய முடியாமலேயே போய்விடுகிறது. அவர்களின் கல்வித்தகுதி வெறும் பிளஸ் 2 என்பதாகவே இருக்கும்.
விடுமுறை எடுத்தல்
கல்லூரிப் படிப்பை பொறுத்தவரை, ஒரு செமஸ்டருக்கு இத்தனை விடுமுறை வரை எடுத்துக் கொள்ளலாம் என்பது அந்தந்த பல்கலைக்கழகங்களின் விதியாக இருக்கும்.
ஒரு குறிப்பிட்ட அளவு வரை விடுப்பு எடுப்பவர்கள், கல்லூரியிலேயே அதற்கான அபராதத்தைக் கட்டி, ஹால்டிக்கெட் பெற்றுக்கொள்ளும் விதிமுறை இருக்கும். அந்தக் குறிப்பிட்ட அளவையும் தாண்டுகையில், அந்த கல்லூரிக்கான சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் சென்று, ஒரு அபராதத்தொகை செலுத்தி, ஹால்டிக்கெட் பெறும் நடைமுறை இருக்கும்.
ஆனால், மேற்கண்ட இரண்டு வரைமுறைகளையும் தாண்டி, அதிகமான விடுப்பு எடுக்கும் மாணவர்கள் ஒரு செமஸ்டர் எழுதும் வாய்ப்பையே இழக்கிறார்கள்.
கல்லூரி வாழ்க்கையில் நுழைந்ததும், சிலருக்கு பட்டாம்பூச்சியாய் மாறிவிட்டதுபோல் உணர்வு ஏற்படும். எனவே, இஷ்டத்திற்கு கட் அடித்துவிட்டு சினிமாவிற்கோ அல்லது வேறு எங்காவதோ செல்வதை ஒரு பெரிய சாதனையாகவோ அல்லது தன் வாலிப பருவத்தின் அடையாளமாகவோ கருதுவார்கள்.
எனவே, அளவோடு, நாம் எந்தளவிற்கு விடுமுறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை நன்கறிந்து, அதற்கேற்ப, உங்களின் படிப்பு பாதிக்காத வகையில், விடுப்பு எடுத்து, கல்லூரி வாழ்க்கையை அனுபவிக்கவும்.
எதிர் பாலினம்
பள்ளி வாழ்க்கையோடு ஒப்பிடுகையில், கல்லூரியில், (அது இருபாலர் பயிலும் கல்லூரியாக இருக்கும்பட்சத்தில்), எதிர் பாலினத்தவரோடு சற்று அதிகமாக பேசுவதற்கும், பழகுவதற்கும் வாய்ப்புகள் கிடைக்கலாம். அத்தகைய வாய்ப்பை படிப்பு விஷயத்திற்கோ அல்லது அறிவை பெருக்கிக் கொள்வதற்கோ அல்லது வேறு ஏதேனும் முக்கியமான வாய்ப்புகளை பெறுவதற்கோ மட்டுமே பயன்படுத்திக் கொண்டால், இருபாலருக்குமே மிகவும் நன்று.
அதைவிடுத்து, இந்த வயதில் இதை செய்யாமல் எப்போது செய்வது என்று சினிமா தாக்கத்தில் சிந்தித்து, அதுவே வாழ்க்கை என நினைத்து, காதல் போன்ற விஷயங்களில் ஈடுபட்டால், படிப்பையும், எதிர்காலத்தையும் கட்டாயம் இழந்து நிற்போம்.
இதர பழக்கங்கள்
கல்லூரி வாழ்க்கையில், மது, சிகரெட் மற்றும் பாக்கு போடுதல் போன்ற பழக்கங்களை கொண்ட மாணவர்களை சந்திப்பது சகஜம். அவர்கள் உடன்படிக்கும் மாணவர்களாகவோ அல்லது விடுதியில் உடன் தங்கியிருக்கும் மாணவர்களாகவோ இருப்பார்கள்.
நம்மையும், அதையெல்லாம் பழகிக்கொள்ள சொல்வார்கள். இதையெல்லாம் செய்தால்தான் அவன் ஆண்பிள்ளை மற்றும் முழு மனிதன் என்பன போன்ற சிறந்த தத்துவங்களையெல்லாம் உதிர்ப்பார்கள். அதுபோன்ற தத்துவங்களை காதுகொடுத்து கேட்பது மட்டுமல்ல, ஒரு பொருட்டாகவே மதிக்காதீர்கள்.
அத்தகைய மாணவர்களுடன், ஒரு அளவோடு பழக்கத்தை வைத்துக்கொண்டு, உங்களின் உடல்நலன், மனநலன், நன்மதிப்பு மற்றும் படிப்பு ஆகியவற்றைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான், நீங்கள் முழுமனிதனாக இருக்க முடிவதோடு, உங்களின் வாழ்வையும், சரியான முறையில் அனுபவிக்க முடியும்.
வாழ்வின் சொர்க்கம்
கல்லூரி வாழ்க்கையை, ஒருவரது வாழ்வின் சொர்க்கம் என்று சொன்னால், அதில் மிகையில்லை என்றே கூறலாம். ஆனால், அந்த சொர்க்கத்தை நாம் எப்படி அனுபவிக்கிறோம் என்பதை வைத்தே, நமது எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது.
ஈடன் தோட்டம் எனும் சொர்க்கத்தில் ஆனந்தமாய் திரிந்த ஆதாமும், ஏவாளும், சாத்தானின் பேச்சைக் கேட்டு, தின்னக்கூடாத ஞானப்பழத்தை தின்று தங்களுடைய வாழ்வை வீணடித்து, தேவையற்ற சாபத்தை பெற்றார்கள் என்பது பைபிளில் வரும் ஒரு கதை.
உங்களின் கல்லூரி வாழ்க்கை எனும் சொர்க்கத்திலும், பல சாத்தான்கள், உங்களை தவறுசெய்ய தூண்டுவார்கள். எனவே, அவைகளின் பேச்சைக்கேட்டு, உங்களின் ஆனந்தத்தை இழப்பதோடு, எதிர்கால வாழ்வையே சூனியமாக்கிக் கொள்ளாதீர்கள் மாணவர்களே!

பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவிகளில் 94.4 சதவீதம் பேர் தேர்ச்சி!


சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. பிளஸ் 2 தேர்வில் மாணவிகள் அதிகளவாக, 94.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு எழுதிய மாணவிகளில் 4,19,794 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 87.9 சதவீதம். தேர்வு எழுதிய மாணவர்களில் 3,41,931 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஒரே பள்ளியில் இரண்டு ‘ரேங்க்’: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவி ஆர்த்தி, அதே பள்ளியை சேர்ந்த ஜஸ்வந்த் ஆகியோர் தலா 1195 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர்.
ஆர்த்தி 1200க்கு 1195 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவர் தமிழில் 199, ஆங்கிலத்தில் 197, கணிதத்தில் 200, இயற்பியலில் 199, வேதியியல் மற்றும் உயிரியல் பாடத்தில் தலா 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

பாடவாரியாக மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள்


சென்னை: பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள்:

ஆர்த்தி  மற்றும் ஜஸ்வந்தும் - 1195 மதிப்பெண் முதல் இடம்.

பவித்ரா, - 1194 மதிப்பெண்  இரண்டாம் இடம் மற்றும் 

வேணு பிரீத்தா - 1193 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3ம் இடம் பிடித்துள்ளார்.

பிரஞ்சு பாடத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள்:

சத்ரியா  கவின், முதல் இடம் - 1195 மதிப்பெண்
 
ஸ்ருதி , இரண்டாம் இடம் - 1194  மதிப்பெண்

சமிரித்தா, மூன்றாம் இடம் - 1193 மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

சமஸ்கிருதம் பாடத்தில் நவீன் மற்றும் நீவேத்திதா - 1193 மதிப்பெண் மாநில அளவில் மூன்றாம் இடத்தை பிடித்தனர்.