தனித்தமிழ் வளர்ப்போம்


Tuesday, 24 February 2015

கல்வி இயக்குனர் அலுவலகம் முற்றுகை: கல்லூரி ஆசிரியர்கள் 300 பேர் கைது


          அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழு மற்றும் தமிழ்நாடு தனியார் கல்லூரி அலுவலர் சங்கம் ஆகியவற்றின் சார்பாக 3 நாள் மறியல் போராட்டம் அறிவித்து இருந்தனர்.


சம்பளம், பதவி உயர்வு, பணிமேம்பாடு, புதிய பென்சன் திட்டம் ரத்து உள்பட 28 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. முதல் நாளான இன்று சென்னை கல்லூரி சாலை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

போலீஸ் தடையை மீறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான கல்லூரி ஆசிரியர்–ஆசிரியைகள் இதில் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.

போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் சுப்பாராஜ், காந்திராஜன், எஸ்.எஸ்.வெங்கடாசலம், திருச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கல்லூரி இயக்குனரக அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். இதையடுத்து அவர்களை போலீசார் தடுத்து கைது செய்தனர். 300–க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.

அனைவரையும் போலீஸ் வேனில் ஏற்றி ஆயிரம் விளக்கில் உள்ள சமுதாய கூடத்துக்கு கொண்டு சென்றனர்.

முன்னதாக ரவிச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:–

கல்லூரி ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். காலதாமதம் செய்தால் போராட்டம் தீவிரமாகும். தொடர் போராட்டங்களை நடத்துவோம். காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment